இரவின் பிணைப்பினில் இடையின் நடுவே சூல் கொண்டு, கருவாகி உருவாகி மடிசேர்ந்த மழலை அல்ல அவ்வுயிர்ச்சிலை. துரோகத்தின் நெடி படர்ந்த துரோணாச்சாரியார் துணையில் அவரின் மாணவர்களான கௌவர்களும் பாண்டவ இளவரசனான அர்ஜுனனும் பாஞ்சால அரசாட்சியை வென்று அதனைப் பிரித்துப் பாதியைத் தமக்காய்ப் பெற்றிட, கண்முன்னே தன் தேசம் இரண்டெனத் துண்டுபடக் கண்டு அவமானத் தீயில் குரோதத்தின் தகிப்பில் பரிதவித்து நின்ற பாஞ்சால மன்னன் துர்பதன், துரோணனவன் பழி தீர்த்து குரு குடும்பத்தை அழிக்கும் ஒரே நோக்கில் ஆசி வேண்டி செய்த அக்னி யாகம் உற்ற வரமாய் யாகத்தீ தன்னில் த்ரிஷ்டத்யும்னன் பின்வளாய் அவதரித்த மாதரசி: முகை, முகிழ், முத்தென்ற நிலைகள் கொள்ளா முழு மலராய் மண் தொட்டவள்.
அவள் திரௌபதி.
மண்ணாசையால் அழிந்த அரவுயர்த்தோன் கதை சொல்லும் அந்த மகாபாரதத்தின் நாயகி, அம்மானுட உருவெடுத்து வந்தவேளை வானில் இருந்து வந்த அரூப ஒலியானது, ‘ஈடு இணையற்ற எழில் கொண்ட இந்தக் கருநிற மங்கை மகளிருள் முதன்மையானவளாய்த் திகழ்வாள்; ஷத்திரியர் பலர் அழிவின் காரணமாய் அமைவாள்; மத ஆட்சியை நிறுவுவாள்; கௌரவர் தமக்கு ஆபத்தையும் விளைவிபப்பாள்’ என்று அவள் கட்டியம் பாடியது.
குழந்தைப் பருவம், தாய் தந்தையின் வளர்ப்பு பற்றி ஏதும் அறியாது வளர்ந்த நிலையிலேயே பூமி வந்தவள், காண்பவரை மூச்சிறைக்கச் செய்யும் பேரழகிதான். அவளின் ஒவ்வோர் அம்சத்திலும் எந்தவொரு குறையும் காண இயலாது. மெலிந்த இடையும், கருநீலச் சுருளாய்க் குழல்களும், தாமரை இதழ்கள் எனக் கண்களும் கொண்ட அம்மெல்லியள் மேனி வாசம் இரு மைல்களுக்கு அப்பாலிக்கும் நீலநிறத் தாமரையை ஒத்திருக்கும்.
கறுப்பழகி என்பதால் கிருஷ்ணை, பாஞ்சால தேசத்து இளவரசி என்பதால் பாஞ்சாலி, யக்ஞசேனன் (துர்பதன்) மகளானதால் யக்ஞசேனி, மகாபாரதத்தில் முக்கிய பங்காற்றியதால் மகாபாரதி, விதர்ப்ப நாட்டில் பணிப்பெண்ணாய் வாழ்ந்த காலத்தில் சைரேந்தி என்ற பல பெயர்களாலும் அழைக்கப்பட்ட அந்த தெய்வப் பெண், ‘திரௌபதி’ அம்மனாய் இன்று பல ஆலயங்களில் வீற்றிருக்கிறாள்.
தென்னிந்தியாவினில் மகாகாளியின் அவதாரமாய் நம்பப்படும் இவள் கிருஷ்ண சோதரியாய் கொடுங்கோல் மன்னர்தம்மை அழிக்கவே அவதரித்தவள் என நம்பப்படுகின்றது. இராவணனுக்கு சாபமிட்ட வேதவதியாய், அவனின் மரணத்திற்கு காரணமான ஜானகியாய், பின் தமயந்தி மற்றும் அவள் மகள் நளாயினியாய் ஜென்மங்கள் கொண்ட அவளே, ஒற்றைத் தேகமதில் ஐந்து தேவ மனைவியரின் அம்ச அவதாரத்துடன் பாஞ்சாலியாயும்; ஜனித்தாள்.
‘யமராஜனின் மனைவியான ஷியாமளா தேவி, வாயுவின் மனைவியான பாரதி, இந்திரன் மனைவியான சசி, இரு அஸ்வினி குமாரர்களின் மனைவியான உஷா ஆகிய நால்வரும் இவளுள் ஐக்கியம்’ என்று சொல்கிறது ஸ்ரீல மத்வாசாரியாரின் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்.
இவ்வாறு பார்போற்றும் அவதார அணங்காய், இந்திய புராணத்தின்படி முதற் பெண்ணியமாய் அவள் அவதரித்திருப்பினும் அவளது ஒவ்வொரு பிறப்பையும், அதில் அவள் எதிர்கொண்ட ஒவ்வொரு நிகழ்வையும் அவள் முன்ஜென்ம கர்மாக்களான பாவ புண்ணியங்களும், சாப வரங்களும்மே தீர்மானித்தன.
‘திரௌபதி என்றால் பேரழகி, பெண்தெய்வம், பக்திக்கும் கற்புக்கும் உதாரணம், உயர் குணத்தாள், கிருஷ்ண சோதரி, லக்ஷ்மியின் அட்சயம் போன்ற வாகனம் கொண்டவள்’ என்று ஒரு சாரார் போற்றி வணங்கிய அதேவேளை ‘அவள் பாஞ்சால இளவரசி, பாண்டவர் மனையாள், ஐந்து ஆடவரின் மஞ்சத்தை மகிழ்வித்தவள், தாயாய் திகழ வேண்டிய அண்ணன் மனைவி – தம்பியர் மக்களுக்கு தாயாகி நின்று இழிநிலை கண்டவள், காமுகி, கற்பபெனும் நெறியின்றும் தவறியவள், பாண்டவர் தம் வீழ்ச்சிக்கும் கௌரவர் அழிவுக்கும் காரணமாய் அமைந்தவள்’ என சில சிற்றெண்ணத்தவர் பழியையும் ஏற்ற தீயுதிர்த் திரௌபதிதன் வாழ்வின் நிதர்சனம் என்ன?
அவதரித்தாள். அவள் ஜென்ம ஜென்மமாய். இருந்தும் வாழ்வை அனுபவித்தாளா?
பிறவிகள் ஒவ்வொன்றாய் இச்செகம் மட்டுமன்றி இந்திரமாண்ட வேந்தர் வரையில் கொண்டு – துய்த்த வேல்விழியவள் அவள் தீரா ஏக்கம் எதனை வேண்டி நின்றது?
அகிலம் கொள்ளும் ஐந்தாம் வேதமாய்ப் போற்றபப்பட்ட மகாபாரதத்தின் இறைவி திரௌபதிதன் அகம்தேடும் ஒரு ஆற்றின் பயணம் இது…
நீளும்…
Discussion about this post